எத்தனையோ கவிதைகளைப் படித்திருக்கிறேன்.. ஆனால் என்னை வசமிழக்கச் செய்த கவிதை மகாகவி பாரதியாரின் 'இயற்கையை நோக்கி வினவுதல்'தான். அதற்கு இணையான ஒரு படைப்பு என இன்றளவும் எதையும் உயர்த்திப் பிடிக்க முடியவேயில்லை.நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? - பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ?
இந்தப் பாடலை எழுதிய காலத்தில் பாரதிக்கு 30 வயதிருக்கலாம்... அல்லது ஒன்றிரண்டு கூடுதலாக இருக்கலாம். ஆனால் அந்த வயதில் அவரின் சொற்பிரயோகம், அந்த சொற்களுக்குள் வாழ்க்கையின் சூட்சுமங்களை வினாக்களாக அவர் தொடுத்திருக்கும் அழகு பிரமிக்க வைத்தது... வைக்கிறது.
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
கண்ணில் காணும் காட்சிகளெல்லாம் இன்றோ அல்லது என்றோ மறைந்து போகிறதென்றால், மறைந்த இக்காட்சிகளை நாம் மீண்டும் காண்போம் என்று அர்த்தமா...
யோசித்தால் ஏதோ ஒரு வடிவில் காட்சிகளும் நிகழ்வுகளும் நினைவுகளாகி பின் மறு பிறத்தலாய் வருவதை உணர முடிகிறது... மாலையில் மயங்கிச் சரியும் சூரியன் மறுநாள் உதயமாகி நிற்பதைப் போல. அப்படியென்றால் மறுபிறப்பு நிஜமோ...
பாரதி நிஜமான ஞானி. இந்த தத்துவ விசாரத்தில் பகுத்தறிவை இழக்கவில்லை. தன் சந்தேகங்களை இயற்கையிடம் கேட்டு, அந்த இயற்கையின் நிகழ்வுகளிலிருந்தே அதைத் தெளிய வைத்துக் கொள்ளும் மேதைமை அவரிடம் இருந்தது.
காலமென்றே ஒருநினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? - இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
என்று கேட்கும் அந்த மகாகவி, அடுத்த கணமே தெளிவைப் பெறுகிறார் இப்படி...
காண்பதுவே உறுதிகண்டோம், காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம்.
காண்பது என்றால் கண்ணால் பார்ப்பது என்றல்ல... எதையும் தீர விசாரித்து தெளிதல் மட்டும்தான் நிஜம். மற்றதெல்லாம் நிஜமல்ல என்ற தெளிவைப் பெறுகிறார். அந்தத் தெளிவு மட்டுமே வாழ்க்கையை உள்ளது உள்ளபடி உணர்ந்து கொள்ள உதவும்.
எஸ்.பிரபாகரன்
16.10.2009
No comments:
Post a Comment
நன்றி... கருத்துப் பரிமாற்றம் இரு வழிப்பாதையாக இருக்கட்டும்!