Friday, October 23, 2009

இவர்கள் அடிமாடுகள்தான்!


நாளாக நாளாக ஈழத் தமிழுணர்வாளர்களின் வேகம், இலக்கு, செயல்பாடு எல்லாவற்றின் நிறங்களும் மங்கத் துவங்கிவிட்டதாய் தெரிகிறது. எனக்கு மட்டுமல்ல, சந்திக்கிற நண்பர்கள், வாசிக்கிற எழுத்துக்கள் எல்லாவற்றிலுமே அந்த பாதிப்பு இருப்பதை உணர முடிகிறது.

நாம் எதிர்பார்த்த நேர்மை இவர்கள் யாரிடமும் இல்லை என்பது கிட்டத்தட்ட இன்று தெள்ளத் தெளிவாகிவிட்டது.

தமிழீழத்திலே நடந்ததெல்லாம் பழங்கனவாய், முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த உயிர்ப்பலிகளெல்லாம் சர்வ சாதாரண விஷயங்களாய் இன்று மாறி வரும் தோற்றம்.

'அதெல்லாம் ஒரு விஷயமா... இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம். சம உரிமை என்ற பேத்தலெல்லாம் இனி எதற்கு...? இலங்கையில் தங்கும் உரிமையும் இருக்க வீடும் கொடுக்கப் போகிற ராஜபக்சேதான் நமது வணக்கத்துக்குரியவர்' என்று வெளிப்படையாகவே பேசித் திரிகிறார்கள்.

தன் இனத்தை அழித்த அந்த கொடுங்கோலனுக்கு, இங்கிருந்து குழுவாகப் போய் பொன்னாடை போர்த்துகிறார்கள். தாய்த் தமிழகத்திலோ, பக்சே சகோதரர்களுக்கு வாழ்த்துக் கவிதை வாசிக்கிறார்கள் ஆட்சிக் கட்டிலிலிருப்பவர்கள்.

'பிரபாகரன் என் தலைவன்... பிரபாகரன் வரும் வரை இயக்கத்தைக் கட்டிக் காப்பவன் நானே... புதிய புலிகள் நாங்கள்' என்று முழங்கிய திருமாக்கள், ராஜபக்சேவின் சபையில் தலை கவிழ்ந்து தமிழன் மானத்தைக் கப்பலேற்றிவிட்டு, இங்கே வெறும் காற்றில் வீரம் பேசுகிறார்கள்.

பிரபாகரன் வருவார்.. ஐந்தாம் கட்ட ஈழப் போருக்கு தலைமை ஏற்பார் என்று கணிப்பொறியின் விசைப்பலகை தேயுமட்டும் அடித்துத் தீர்க்கும் அருட் தந்தைகள், இந்தப் பக்கம் இந்திய ஏஜென்டுகளுடன் 'வந்தா பார்ப்போம்' என கீழ்க்குரலில் கிண்டலடிப்பதான தோற்றம்.

சூசை கடல் மார்க்கத்தில் தப்பித்ததாய் 1000 மடங்கு உறுதித்தன்மை மிக்க செய்தி சொன்னவர்களோ, இன்று அவர் 'ஜக்கத் அடித்தார்' என்று கூடவே இருந்து பார்த்தவர்களைப் போல கதைவிடுகிறார்கள்...

இத்தனை காலமும் பம்மித் திரிந்த டக்ளஸ்கள் உதவித் தொகை வழங்கும் காட்சிகள், கருணாக்கள் ஒயின் கோப்பையுடன் உல்லாசமாய் அழகிகளுடன் கூடிக் களிக்கும் கோலங்கள், நான்கே நாட்களில் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்துவிட்டதாய் பீற்றிக் 'கொல்லும்' தமிழின தலைவர்கள்...

இன்னும் நாம் பார்க்க வேண்டிய, ஆனால் பார்க்கக் கூடாத காட்சிகள் எவ்வளவோ இருப்பதாய் மனம் சொல்கிறது...

அவற்றில், இறுதிப் போர் எனும் பெயரில் தமிழ் தலைவர்களை, 20 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்றழித்த ராஜபக்சேவுக்கு தமிழக அரசின் சார்பில் விருந்தளித்து கவுரவிக்கும் காட்சி ஒன்றும் பாக்கியிருக்கக்கூடும்!!

-எஸ்.பிரபாகரன்
23.10.2009

1 comment:

நன்றி... கருத்துப் பரிமாற்றம் இரு வழிப்பாதையாக இருக்கட்டும்!