இந்தக் கேள்வியை இன்று பலரும் எழுப்பி வருகின்றனர். நிச்சயம் முடியும். இதற்கான பதிலுக்குப் போகும் முன் ஒரு முக்கிய விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்....பத்திரிகை நடத்துபவர்கள் எல்லாம் பத்திரிகைக்காரர்கள் அல்ல. பத்திரிகை நடத்துபவர்கள் முதலாளிகளாகவும், பத்திரிகையாளர்கள் உழைக்கும் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
பத்திரிகையாளர் ஒருவரே உரிமையாளராகவும், செய்திகளுக்கான பொறுப்பாளராகவும் இருக்கும் போது தன் எண்ணத்தை முழுமையாக அமல்படுத்தலாம். ஆனால் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களால் தங்கள் கருத்ததை நிர்வாகத்திடம் சொல்லத்தான் முடிகிறது. "சரி பார்க்கலாம்... நீங்க இப்போதைக்கு இந்த நயன்தாரா மேட்டரை ரெடி பண்ணுங்க" எனும்போது, பத்திரிகையாளன் நிர்க்கதியாகிறான்.
சினிமா இல்லாமல் பத்திரிகை / தொலைக்காட்சி நடத்த முடியும் என்பதற்கு எத்தனையோ நல்ல உதாரணங்கள் உள்ளன. தமிழில் அப்படியொரு உதாரணம் மக்கள் தொலைக்காட்சி மற்றும் தமிழ் ஓசை நாளிதழ். இவை இரண்டும் நடத்தப்படுவது யாரால் என்பதைப் பாராக்காமல், அவற்றை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டும். மக்கள் தொலைக்காட்சியில் எப்போதாவது சில ரஷ்ய அல்லது ஈரானியப் படங்கள் திரையிடப்படுவதோடு சரி. வேறு சினிமா நிகழ்ச்சிகளே கிடையாது. நடிகர்கள் தயவு அவர்களுக்கு தேவைப்படுவதும் இல்லை.
தமிழ் ஓசை நாளிதழில் சினிமா செய்திகளே இல்லை. இரண்டும் நன்றாகத்தான் செயல்படுகின்றன. மக்கள் அவற்றுக்கும் ஆதரவை அளிக்கவே செய்கிறார்கள்.
ஆகவே, மீடியா நிர்வாகங்கள் இந்த விஷயத்தில் உடனடி முடிவை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.

என்னால் ஒரு விஷயத்தை உறுதியாக இங்கே பதிவு செய்ய முடியும்... பத்திரிகைகள் சினிமாவின் தயவின்றி நிச்சயம் வெற்றிகரமாக இயங்க முடியும். காரணம் ஒரு நாளிதழின் 16 பக்கங்களில் அதிகபட்சம் ஒரு பக்கம்தான் சினிமா செய்தி. அது கூட இன்றைக்குதான் அந்த நிலை. ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு வாரத்துக்கு ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம்தான் சினிமா செய்திகள் வந்தன. அதுகூட வாசகர்களின் கவனத்துக்கு சற்று ஓய்வு கொடுக்கும் பொருட்டுதான். எண்பதுகளில் தினமணியில் இடம்பெற்ற சினிமா செய்திகள் வெகு வெகு குறைவே. ஆனால் அன்றும் அந்தப் பத்திரிகை முதல் நிலை நாளிதழ்தான்.
அதற்காக சினிமா துறையை ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாகவும் நினைக்கத் தேவையில்லை. கலை என்ற பார்வையில் எது நல்ல விஷயமோ, எது பாராட்டப்பட வேண்டியதோ அதை மட்டும் ஒரு செய்தியாகப் பதிவு செய்தாலே போதும். தேவையற்ற பிம்ப உருவாக்கல்களை நிறுத்தலாம். திகரையுலகின் தவறுகளை / ஒழுக்க மீறல்களை மக்களுக்கான எச்சரிக்கைகளாகத் தரலாம். அதன் பேரில் காவல் துறை நடவடிக்கைகளைக் கூட வலியுறுத்தலாம்.
திரைத்துறையினர் பத்திரிகையாளர்களை இன்று இத்தனை கேவலமாக, விலை மகன் என்று மேடைபோட்டு ஆபாசமாக திட்டக் காரணம், பெரும்பாலான பத்திரிகையாளர்களின் நடத்தைதான் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.
இன்றைக்கு முன்னணி சினிமா நிருபர்களாகப் பணியாற்றுபவர்களில் சிலர் பிரியாணிக்கும் கவருக்கும் மாலை நேர தண்ணிப் பார்ட்டிக்கும் அடிமையானவர்களாகவே இருக்கிறார்கள். நேர்மையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன் சினிமா சங்கங்களைச் சேர்ந்த சிலர் இணைய தளப் பத்திரிகையாளர்களை தயாரிப்பாளர்கள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அழைப்பதில்லை (மற்ற விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு அழைக்கலாம்) என முடிவெடுத்து வாய்மொழியாக அறிவித்தார்கள்.
அதை ஆரம்பத்தில் எதிர்த்துப் பார்த்தார்கள் சினிமா பத்திரிகையாளர்கள். ஆனால் அதில் உறுதியோ ஒற்றுமையோ இல்லாமல் போக, கடைசியில் தயாரிப்பாளர்கள் வைத்ததே சட்டமானது. உடனே, பல இணையதளப் பத்திரிகையாளர்கள் சடாரென்று ஏதோ ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி அதில் இணைந்துவிட்டதாக கடிதம் கொடுத்து, தயாரிப்பாளர்களின் நிகழ்ச்சிகளுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். எப்படி மதிப்பார்கள் பத்திரிகைக்காரர்களை...
விழாவுக்கு பத்திரிகையாளர்கள் வேண்டாம் என்று சொன்னால் விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாமே... எதற்கு அவர்களிடம் கூப்பிடுங்க கூப்பிடுங்க என்று கெஞ்சுகிறார்கள்...
ஒரு நாளிதழில் சின்னதாக விளம்பரம் வெளியாக வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் ரூ.10000 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் சினிமா செய்திகளை ஒரு முழு பக்கத்துக்கு இலவசமாக வெளியிட வேண்டிய அவசியமென்ன?
இணையதளங்களில் சின்ன பேனர் விளம்பரம் வைக்க லட்சக் கணக்கில் கட்டணம் விதிக்கப்படும்போது, இவர்களின் படங்களுக்கு இலவச ட்ரெயிலர் போடுவது எதற்கு?
சினிமாக்காரர்களை சட்டத்தை மீறிய பிம்பங்களாக மிகையாகக் காட்டிய பெரும்பிழையைச் செய்தவர்கள் பத்திரிகைகளே. அந்தப் பிழையைச் சரியாக்கவும், பிம்பங்கள் பின்தள்ளப்பட்டு, நல்ல மனிதர்களின் பிடிக்குள் நாடு செல்லவும் தேவையான புதிய பாதையில் இனியாவது பத்திரிகைகள் நடைபோடுமா?
எஸ்.பிரபாகரன்
16.10.2009
//பல இணையதளப் பத்திரிகையாளர்கள் சடாரென்று ஏதோ ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி அதில் இணைந்துவிட்டதாக கடிதம் கொடுத்து, தயாரிப்பாளர்களின் நிகழ்ச்சிகளுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். எப்படி மதிப்பார்கள் பத்திரிகைக்காரர்களை...//
ReplyDeleteவெக்கங்கெட்டவர்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நீங்கள் சொல்வது உண்மை. வாழ்த்துக்கள்
http://thisaikaati.blogspot.com
தினமணி கதிர், இந்தியா டுடே , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற சில பத்திரிக்கைகள் இன்னமும் சினிமா செய்திகள் ஒரு பக்கம் அளவு மட்டுமே எழுதி விற்பனை செய்கின்றன.
ReplyDeleteஇப்போது உள்ள இனைய காலத்தில் பத்திரிக்கை நடத்துவதே கடினம் , எனவே சினிமா செய்திகள் இல்லாவிடில் இன்னும் கடினம்.
இன்று எந்த பத்திரிகையும் சினிமா காரர்களிடம், அரசியல் வாதிகளிடம் பணம் வாங்காமல் நடப்பது இல்லை. வருத்தமான விஷயம்.
dinamani runs another weekly called cinema express.....mind it.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ரோஸ்விக்...
ReplyDeleteதிரு குப்பன்.யாஹூ, நீங்கள் சொல்வது உண்மைதான். நாம் தினமணி என்ற நாளிதழின் பாணி பற்றி மட்டுமே இங்கே சொல்கிறோம்.
சினிமா எக்ஸ்பிரஸ் என்பது முற்று முழுதான ஒரு சினிமா பத்திரிகை. அதை இந்தக் கணக்கில் சேர்க்க முடியாது.
நன்றி அனானி. பெயரையும் குறிப்பிடுங்களேன். அனானி என்று அழைப்பது சரியாக இல்லையே!